நீர் வெளியேறிய
படிமங்களின் துகள்களை
ஒளிகற்கள் என்றாய்,
சுண்ணாம்பு பாறைகளில்
நுணா பழங்களைத் தேடியலைந்து
ஏதுமில்லாத ஒரு நாளில்
ஒளியின் வெளிச்சத்தை விழுங்குகிற
கிரகண புள்ளிகளை விரட்ட
யாரோயெறிந்த
சுண்ணாம்புக் கற்கள் தான்
நட்சத்திரங்கள் என்றாய்,
கானகத்தை மௌனமென்றாய்,
கிளைகள் பூக்களின் வேர்களென்றாய்,
சுனையின் மறைபொருளைத்
திரும்பத் திரும்ப
நீயே கற்றுத்தந்தாய்,
யுகயிரவுகள் கடந்து
ஆகாசநீலத்திற்குக் கேட்க
ஞாபகங்களைக் கூறினோம்
ஒவ்வொரு நாளின் வழியெங்கும்
புற்றீசல் சிறகுகளாக
நினைவின் ஞாபகப்பிழைகள் மட்டும்
பிய்ந்து கிடக்கின்றன...