ஞாயிறு, 3 அக்டோபர், 2021

கானல்நீர்

 

தினம் தினம் 
நாளின் மாலை மீதேறி
பட்டியடைகிறது
ஒரு கிடாய்

அன்றாடங்களின் பாதையில்
வடக்குத்தெரு முக்கு திருப்பியதும்
கருவேலமரக் காய்கள்
மறந்ததேயில்லை
எந்நாளும்,
அல்லிக்குட்டையைத் தாண்டி
ஆலமர நிழலிலிருந்து விரியத்தொடங்கும் 
கிடாயின் மத்தியானங்களில்
புற்களின் நுனி
செடி கொடிகளின் இலைகளென
நேற்றுச்சென்ற இடங்களுக்கு
இன்று செல்வதில்லை
இருந்தும் அறுகம்புற்கள் திசையில்
மட்டும் தொலைந்தே போகிறது,
இரவுகளைப் பட்டியில் வைத்தே 
பார்த்துப்பழகிய கிடாய்க்கு
பட்டியின் நீள அகலமே இரவினெல்லை,
அன்றொரு மாலை 
திசைகளிழந்த கிடாய்க்கு
இரவே நீள அகலப் பட்டியானது
தொலைந்த சரிவின் இறக்கத்திலிருந்து
மெள்ள இரவு விலகி விடிகையில்
பட்டியடைந்த கிடாய்க்கு
தரை முழுதும் பூத்துக்கிடந்தன 
அறுகம்புற்கள்.

நினைவூட்ட

  காலச்செறிவின்  பாழ்நில வெளியெங்கும்  பிறக்கவிருக்கிறது ஒரு கானகம், மணற் குடுவைகளில் குவியல் குவியலாகச் சரிகின்ற  மணலும் வெளியும் எதிலெதை ந...